பாகிஸ்தானில் அதிகரிக்கும் போராட்டங்கள் : சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பதவி விலகல்

0
52

பாகிஸ்தானில் அதிகரிக்கும் போராட்டங்கள் : சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பதவி விலகல்

இஸ்லாமாபாத் : தமக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பதவி விலகி உள்ளார். பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின்போது, இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் பிரமாணப் பத்திரிகை அளிப்பது வழக்கம். அதை மாற்றி சமீபத்தில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதாவை பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். இது மத ரீதியான உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி பாகிஸ்தானில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் அவர் பதவி விலகவேண்டும் என்றும் போராட்டங்கள் வெடித்தன. அமைச்சர் பதவி விலகக்கோரி இஸ்லாமாபாத்தில் பல்வேறு மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி, இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸார், அதிரடிப்படையினர், ஆகியோர் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் கலவரம் ஏற்பட்டு கல்வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்தக் கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 200 பேர் படுகாயம் அடைந்தனர். அமைதியை சீர்குலைக்கும் இந்த போராட்டங்களால் அங்கு சமூக வலைத்தளங்கள், இணைய வசதி போன்றவை துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத் ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜாஹித் ஹமீத் தனது ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸிடம் வழங்கியிருப்பதாக அந்நாட்டு அரசு வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here