பிரம்மபுத்ரா நதியில் உருவான 3 பிரமாண்ட செயற்கை ஏரிகள்! இந்தியாவுக்கு ஆபத்து என சீனா எச்சரிக்கை!

0
33

பிரம்மபுத்ரா நதியில் உருவான 3 பிரமாண்ட செயற்கை ஏரிகள்! இந்தியாவுக்கு ஆபத்து என சீனா எச்சரிக்கை!

திபேத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தால் 3 மிகப்பெரிய செயற்கை ஏரிகள் உருவாகி உள்ளன. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் ஹுவா சங்க்யிங் பீஜிங்கில், திபேத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால், பிரம்மபுத்ரா நதியின் மூன்று இடங்களில் மிகப்பெரிய செயற்கை ஏரிகள் உருவாகி இருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலமாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஏரிகளின் பரப்பளவும், அவற்றில் உள்ள தண்ணீரின் அளவும் இன்னும் கணக்கிடப்படவில்லை. இருப்பினும், இவை இயற்கையாக ஒன்றாக இணைந்தாலோ அல்லது உடைந்தாலோ இந்தியாவில் பெரியளவில் வெள்ள ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

புதிய ஏரிகள் உருவாகியுள்ள பகுதிகளுக்கு அருகே அருணாசலப் பிரதேசத்தில் சியாங் ஆற்றங்கரையிலும், அசாமில் பிரம்மபுத்ரா ஆற்றங்கரையிலும் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். ஏரிகள் உடைந்தால், இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சீன அதிகாரிகள் செய்த ஆய்வின் அடிப்படையில், 3 ஏரிகளும் சீனாவை ஒட்டிய இந்தியாவின் கிழக்கு எல்லைக்கு அருகே அமைந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏரிகள் இயற்கையாக உருவானவை. மனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல. இவற்றை இந்திய அதிகாரிகளும் பார்வையிட்டு, ஆய்வு செய்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த ஏரிகள் எப்படி உருவானது என்பது பற்றி இந்திய ஊடகங்கள் கற்பனை செய்திகளை வெளியிடாது என்று கருதுகிறேன். ஏரிகளின் நிலவரம் பற்றி இந்தியாவுடன் சீனா தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். அருணாச்சல பிரதேசத்தில் ஓடும் சியாங் நதியின் தண்ணீர், கடந்த சில மாதங்களாக சேறு கலந்து பாய்ந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆற்றின் தண்ணீரை வறட்சியால் பாதித்த தனது மாகாணங்களில் ஒன்றான ஜின்ஜியாங் பகுதிக்கு திருப்பி விடுவதற்காக சீன அரசு பிரமாண்ட சுரங்கம் தோண்டுவதாகவும், அதன் காரணமாகவே இந்த ஆற்று நீரில் சேறு கலந்து வருவதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. இதை சீனா மறுத்தது. டெல்லியில் சில தினங்களுக்கு முன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் சீன அரசின் உயர்மட்ட பிரதிநிதியான யாங் ஜிச்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதும் இந்த பிரச்னை பற்றி ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here